Kahlil Gibran kavithai inbam

My Tamil translations of Kahlil Gibran's poems

Name:
Location: Chennai, TamilNadu, India

Thursday, April 22, 2004

14. விமர்சகர்கள்


ஓர் இரவு நேரத்தில்
கடல் நோக்கிக்
குதிரை ஒன்றில்
பிரயாணம் மேற்கொண்ட
வழிப்போக்கன் ஒருவன்
விடுதி ஒன்றில்
இளைப்பாற இறங்கினான்.

கடல் நோக்கிப் போகும்
யாவரைப் போலவே
இரவின் மீதும்
ஏனைய மனிதர் மீதும்
மிகுந்த நம்பிக்கை கொண்டு
குதிரையைக் கதவருகில்
கட்டிப் போட்டு
உள்ளே சென்றான்.

நள்ளிரவில்
உறக்கத்தின் போர்வையில்
அனைவரும் ஆழ்ந்திருக்க
திருடன் ஒருவன்
வருகை புரிந்தான்,
குதிரை கவர்ந்து
மறைந்து போனான்.

காலையில் எழுந்து நடந்ததை அறிந்த
வழிப்போக்கன்
குதிரை களவு போனதற்குக் கொஞ்சமும்
குதிரை களவாட ஒருவன் துணிந்தானே
என்பதற்கு மிகுதியும்
வருத்தம் கொண்டான்.

விடுதியில் இருந்த மற்ற பயணிகள்
சுழ்ந்து நின்று கூட்டம் சேர்த்தனர்,
களவு குறித்து கருத்து உதிர்த்தனர்.

முதலாமவன் சொன்னான்,
"லாயம் ஒன்று உள்ளே இருக்க
குதிரையை வெளியில் கட்டி நிறுத்திய
உம் மூடத்தனம் என்னே..!"

இரண்டாமவன் சொன்னான்,
"கட்டிப்போட்டால் மட்டும் போதுமா?
கால்கள் நகராமல் இருக்க
வழி வகை செய்திட மறந்தீரோ?
உமக்கெல்லாம் எதற்கு
குதிரையும் பயணமும்?"

மூன்றாமவன் சொன்னான்,
"கடலை நோக்கிக்
குதிரையில் போவது
வடிகட்டிய முட்டாள்தனமன்றி வேறில்லை."

நான்காமவன் சொன்னான்,
"சோம்பேறிகளும் கால் விளங்காதவர்களும்
மட்டும் தான்
குதிரைகள் வைத்திருப்பார்கள்."

வழிப்போக்கன் மிகுந்த வியப்புடன்
அவர்களிடம் சொன்னான்,
"நண்பர்களே,
என் குதிரை களவு போனதினால்
என் குறைகளை
யாரும் கேட்காமலேயே
அறைகூவி அறிவிக்க
நீங்கள் இத்தனை வேகம் காட்டுகிறீர்கள்.
னால் குதிரையைத் திருடியவன் பற்றி
ஒரு சின்ன முணுமுணுப்பு கூட
இன்னும் செய்யவில்லையே,
அது ஏனோ?"

Sunday, April 11, 2004

13. கடவுளும் சாத்தானும்


கடவுளும் சாத்தானும்
ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.

கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"

சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"

சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,
சீச்சீ,
எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"

கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்
என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,
அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"

சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது.

Wednesday, April 07, 2004

12. மதிப்புகள்


ஏழை ஒருவன்
தன் நிலத்திலே
புதைந்து கிடந்த
பளிங்குச் சிலை
ஒன்றைக் கண்டெடுத்தான்.

கலைப் பொருட்களை
வாங்கிச் சேகரிக்கும்
கலை ஆர்வலர் ஒருவரிடம்
காண்பித்தான்.

சிலையின் அழகும்
கலைநயம் மிக்க உருவாக்கமும்
ஆர்வலரைக் கவர்ந்தன.
பெரும்பணம் தந்து வாங்கிக் கொண்டார்.

பணத்துடன் திரும்பிய
ஏழைக்கு ஆச்சர்யம்,
"இத்தனை பணம் கொண்டு
எது வேண்டுமானாலும் செய்யலாமே?
எப்படிப்பட்ட வாழ்க்கையையும் அமைக்கலாமே?
செதுக்கப்பட்டு,
பலநூறு ஆண்டுகள்
உலகின் கவனம் படாமல்
புதைந்து கிடந்த
ஒரு சாதாரணமான கல்லுக்காக
இத்தனை பணம் தருபவர்களும்
இருக்கிறார்களே இவ்வுலகில்..!!"

சிலையை ரசித்துக் கொண்டிருந்த
ஆர்வலருக்கும் ஆச்சர்யம்,
"என்ன அழகு! எத்தனை உயிர்ப்பு!
எத்தகைய ஆன்மாவின் அற்புதக் கனவு..!!
பலநூறு ஆண்டுகள்
அழியாத புதுக்கோலம்!
உயிர்ப்பும் உணர்வும்
எதுவுமற்ற பணத்திற்காக
விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைத் தருபவர்களும்
இருக்கிறார்களே இவ்வுலகில்..!!"

பின் குறிப்பு: இன்றைய பதிவில் கவிதை வாசனை ரொம்பக் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது எனக்கு. மன்னிக்கவும்.

Tuesday, April 06, 2004

11. மாதுளை


நானொரு மாதுளைப் பழத்தின்
இதயத்தில் வசித்து வந்தேன்.

ஒரு விதை சொன்னது,
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன்.
காற்று என் கிளைகளுக்கிடையில்
ராகம் பாடும்,
கதிரவன் என் இலைகளின் மேல்
நடனம் புரியும்,
எல்லாக் காலங்களிலும் நான்
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்."

இன்னொரு விதை சொன்னது,
"நானும் உன்னைப் போல்
இளம்பிராயத்தினனாய் இருந்த போது
இது போல் நினைத்ததுண்டு.
இன்றோ
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன்,
இத்தகு நம்பிக்கைகள் வீணென்று
கண்டுணர்ந்துள்ளேன்."

மூன்றாவது விதையும் பேசியது,
"வளமானதொரு எதிர்காலத்திற்கான
நம்பிக்கைகள் எதையும்
நமது தற்கால வாழ்வில்
நான் காணவில்லை."

நான்காவது விதை சொன்னது,
"சீச்சீ..!!
அப்படி ஒரு நல்ல எதிர்காலம்
இல்லாமல் போகுமானால்
எத்தனை ஏமாற்றம்?
இதற்குத்தானா பிறப்பெடுத்தோம்?"

ஐந்தாவது விதை சொன்னது,
"நாம் என்னவாக இருக்கிறோம்
என்பதே சரியாகப் புரியாத போது
நாம் என்ன ஆவோம்
என்பதைப் பற்றி
ஏன் இத்தனை சர்ச்சை?"

ஆறாவது விதை பதில் சொன்னது,
"நாம் என்னவாக இப்போது இருக்கிறோமோ
அதுவாகவே
எப்போதும் இருப்போம்."

ஏழாவது விதை சொன்னது,
"நாம் எப்படி இருப்போம்
என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது,
ஆனால் அதை
வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை."

இப்படியே மேலும்
எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது,
இன்னும் பலப்பல விதைகள் பேசின,
கடைசியில் எல்லா விதைகளும்
சேர்ந்து போட்ட கூச்சலில்
எனக்கு எதுவுமே சரியாகக் கேட்கவில்லை.

அன்றே நான்
ஒரு ஆப்பிள் பழத்தின் இதயத்திற்கு
இடம் மாறி விட்டேன்.
அங்கு விதைகளும் குறைவு,
அவைகள் அதிகம் பேசுவதுமில்லை.

Monday, April 05, 2004

10. அவரவர் நம்பிக்கை


ஒரு நாள்
மெத்த அறிவு படைத்த நாய் ஒன்றின்
பாதையின் வழியே
ஒரு பூனைக் கூட்டம் கடந்து சென்றது.
தன்னைக் கவனிக்காமல்
அப் பூனைக் கூட்டம்
மிகுந்த முனைப்புடன்
முன்னோக்கிச் செலவதைக் கண்ட நாய்
நின்று கவனித்தது.

பூனைகள் வட்டமாக அமர்ந்தன.
மூத்த பூனை ஒன்று,
உறுதியும் எச்சரிக்கையும்
தொனிக்கும் குரலில் சொன்னது,
"சகோதரர்களே..!
வழிபடுங்கள், வழிபடுங்கள்,
நம்பிக்கையோடும், கீழ்ப்படிதலோடும்
மீண்டும் மீண்டும் நாம்
வழிபட்டால்
வானத்திலிருந்து
கணக்கற்ற எலிகள் மழையாகப் பொழியும்.."

இதைக் கேட்ட நாய்
பரிகசித்துச் சிரித்தபடி
தனக்குள் சொல்லிக் கொண்டது,
"இந்த முட்டாள் பூனைகளின்
குருட்டு நம்பிக்கைகளுக்கு
அளவில்லாமல் போயிற்றே..
நமது ஆதி நூல்களில் எழுதப்பட்டு
நானும் எனக்கு முன்னால் என் முன்னோரும்
அறிந்த உண்மைகளின் படி
நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் மிக்க
வழிபாட்டின் பலனாக
மழையாகப் பொழியப் போவது
எலிகளல்ல, எலும்புத் துண்டுகளன்றோ..!"

9. நீதி


அரச மாளிகையில்
அன்று விருந்து..
திடீரென்று மனிதன் ஒருவன் நுழைந்து
அரசனைப் பணிந்தான்..
விருந்தாளிகள்
அவனை நோக்கினர்..
அவன் கண்களில் ஒன்று
குத்திக் கிழிக்கப்பட்டு
ரத்தம் வடிந்த நிலையில்
குழியாய் இருப்பதைக் கவனித்தனர்..

அரசன் கேட்டான்..
"நீ யார்..?
உனக்கு நேர்ந்தது என்ன..?"

அவன் பணிந்து வணங்கி சொன்னான்..
"அரசே..!!
நான் தொழிலால் ஒரு திருடன்..
இன்று நிலவில்லா அமாவாசை இரவானதால்
அடகுக் கடையில் திருடக் கிளம்பினேன்..
என் போறாத காலம்,
தவறிப் போய்
நெசவாளன் கடையில் நுழைந்து விட்டேன்..
அவன் தறியின் கம்பி
என் கண்ணைக் குத்திக் கிழித்து விட்டது..
அரசே..!!
எனக்கு நீதி வழங்க வேண்டுகிறேன்.."

நெசவாளனை அழைத்து வர
அரசன் பணித்தான்..
அவன் வந்ததும்
அரசவை, வழக்கினை ஆராய்ந்து
அவனது ஒரு கண்
குத்திக் கிழிக்கப் பட வேண்டுமென்று
தீர்ப்பு வழங்கியது..

நெசவாளன் பணிந்து வணங்கிச் சொன்னான்..
"அரசே.!!
ஒரு கண்ணுக்கு மறுகண் என்பது
மிகச் சரியான தீர்ப்பு..
இருந்தாலும்,
என் தொழிலில்
நான் நெய்யும் ஆடையின்
இரண்டு பக்கங்களை ஆராய்ந்திட
எனக்கு இரண்டு கண்கள் அவசியம் தேவை..
எனக்குப் பக்கத்துக் கடையில்
செருப்புத் தைப்பவன் ஒருவன் உண்டு..
அவன் தொழிலில்
இரண்டு கண்களுக்கு அவசியம் இல்லை..
ஒரு கண்ணே போதுமானது.."

அரசன் சிறிது நேரம் சிந்தித்தான்..
அவன் ஆணைப்படி செருப்புத் தைப்பவன்
அழைத்து வரப்பட்டான்..
அவன் இரு கண்களில் ஒரு கண்
குத்திக் கிழிக்கப்பட்டது..

நீதி அங்கு
நிலை நிறுத்தப்பட்டது..!!