Kahlil Gibran kavithai inbam

My Tamil translations of Kahlil Gibran's poems

Name:
Location: Chennai, TamilNadu, India

Sunday, November 23, 2003

8. என் பழைய மொழி


நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..??"

அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."

எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!"

ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..

இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்..
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,
"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..

ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,
"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..
நான் கோபத்துடன்,
"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..
ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..

நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!

Tuesday, November 11, 2003

7. போரும் சிறிய நாடுகளும்


விளைநிலம் ஒன்றில்
ஒற்றை ஆடும் அதன் குட்டியும்
மேய்ந்தபடி இருந்தன..

கழுகு ஒன்று
குட்டி ஆட்டினைப்
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி
வட்டமடித்து வந்தது..
கீழிறங்கி
இரையினைக் கவ்வும் நேரத்தில்
இன்னொரு கழுகும்
பசியோடு வந்து சேர்ந்தது..

எதிரிகளின்
ஆவேசப் போராட்டத்தின்
கூக்குரல்
வானமெங்கும் நிரம்பி வழிந்தது..

ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து
ஆச்சர்யப்பட்டுப் போனது..
குட்டியிடம் சொன்னது,
"பார்த்தாயா குழந்தாய்..
எத்தனை விநோதம் இது??
இவ்விரு பெரிய பறவைகளுக்கும்
விரிந்து பரந்த இந்த காயம்
போதவில்லையோ??
இப்படி ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொள்கிறார்களே..!!
சிறகு முளைத்த அந்த
உன்னிரு சகோதரர்களுக்கிடையில்
சமாதானம் ஏற்படட்டும் என்று
இதயபூர்வமாய் நீ
இறைவனை வேண்டிக் கொள்..!!"

குட்டியும் அவ்வாறே
வேண்டிக் கொண்டது..!!

Friday, November 07, 2003

6. மன்னனின் மறுப்பு


ஒருநாள்
நகரத்தின் பெரியோர்கள்
அத்தனை பேரும்
மன்னனைச் சந்திக்கச் சென்றனர்..

மன்னனைப் பணிந்து
மனுச் செய்தனர்..
"நகர மாந்தர் அனைவரும்
மதுவும்
மற்ற வகை மயக்கப் பொருட்களும்
அருந்திச் சோர்ந்து கிடப்பதை மாற்றிட
அவற்றைத் தடை செய்திட வேண்டும்" என்று..

மன்னனோ
அவர்களின் வேண்டுகோளைக் கேட்டதும்
"மூளையற்ற கோரிக்கை இது" எனக் கூறி
நகைத்து விட்டு வெளியேறினான்..

நகரத்தின் பெரியோர்கள்
வேதனை மிகுந்து
திரும்பும் வழியில்
மூத்த மந்திரி ஒருவரைக் கண்டனர்..
மந்திரி அவர்களின் குறையினை அறிந்தார்..
பாவமாக அவர்களைப் பார்த்துச் சொன்னார்..
"அடடா..!!
பிழை செய்துவிட்டீர்களே..
மதுவின் மயக்கத்தில்
மன்னன் கிடக்கையில்
மனுவினை அளித்திருந்தால்
கேட்டது கிடைத்திருக்கும்..
காரியம் நடந்திருக்கும்..!!"

Wednesday, November 05, 2003

5. துறவி


மலைகளுக்கு அப்பால் இருந்த
துறவியின் குடிலில்
நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்..
அப்போது ஒரு திருடன்
நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன்
அவரை நாடி வந்தான்..

"முனிவரே..!!
எனக்கு நிம்மதி தாருங்கள்..
உங்களால் மட்டுமே முடியும்..
என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.."

"வருந்தாதே..!!
என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.."

"ஆனால்
நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!"

"நானும் திருடன் தான்.. கொள்ளைக்காரன் தான்..!!"

"நான் ஒரு கொலைகாரன்..
என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!"

"நானும் கொலைகாரன் தான்..
என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!"

"நான் எண்ணிலடங்கா
குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!"

"நானும் செய்துள்ளேன்..!!"

திருடன் எழுந்து நின்றான்..
புரிந்து கொள்ள முடியாத
ஒரு பார்வை அவனிடம்..
திரும்பி நடந்தான்,
நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்..

நான் துறவியிடம் கேட்டேன்..
"நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம்
செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..??
அவன் உங்கள் மேல்
நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!"

துறவி சிரித்துக் கொண்டே கூறினார்..
"அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்..
ஆனால், நிம்மதி அடைந்து போகிறான்..!!"

நான் அப்போது தான் கவனித்தேன்..
திருடனின் உற்சாகமான பாடல் ஒலி
பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது..!!

Monday, November 03, 2003

4. நரியின் பசி


நரி ஒன்று
காலை வேளையில்
தன் நிழலைக் கண்டது..
"இன்று நான்
ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.."
என்று எண்ணிக் கொண்டது..

பகல் முழுவதும்
ஒட்டகத்தைத் தேடி அலைந்தது..

நண்பகலில்
தன் நிழலை மீண்டும் கண்டது..
"ஒரு எலி போதும் எனக்கு.."
என்ற முடிவுக்கு வந்தது..!!

Sunday, November 02, 2003

3. கண்


கண் ஒரு நாள் சொன்னது..
"பாலைவனத்திற்கு அப்பால்
ஒரு பனி மூடிய மலை
தெரிகிறது பாருங்கள்..
எவ்வளவு அழகாக இருக்கிறது..?"

காது கொஞ்ச நேரம்
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்
பிறகு சொன்னது..
"மலையா?? எந்த மலை??
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!"

கையும் பேசியது..
"என்னால்
எவ்வளவு முயன்றும்
அந்த மலையைத் தொட முடியவில்லையே..
மலை நிச்சயம் இருக்கிறதா..??"

மூக்கு உறுதியாகச் சொன்னது..
"மலை எதுவும் கிடையாது..
எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!"

கண் வேறு பக்கமாய்த்
திரும்பிக் கொண்டது..

மற்ற உறுப்புக்களெல்லாம்
தங்களுக்குள் பேசிக் கொண்டன..
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன..
"கண்ணில் ஏதோ
கோளாறு ஏற்பட்டு விட்டது..!!"