Kahlil Gibran kavithai inbam

My Tamil translations of Kahlil Gibran's poems

Name:
Location: Chennai, TamilNadu, India

Friday, October 31, 2003

2. வெள்ளைக் காகிதம்


வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..

அது சொன்னது,
"நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்களும் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை..!

இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியபடி
பரிசுத்தமானதாகவே இருக்கிறது..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது..!!

Thursday, October 30, 2003

1. இறைவன்


முன்னொரு காலத்தில்
பேச்சின் முதல் தீண்டலை
என் உதடுகள் தரிசித்த போது
நான்
புனித மலையின் மேலேறி நின்று
இறைவனிடம் சொன்னேன்..
"எசமானனே.. நான் உன் அடிமை..
உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை..
உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!"
இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல்
ஒரு பெரும் புயலைப் போல்
என்னைக் கடந்து சென்றார்..

ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்
நான்
மீண்டும் புனித மலையில் ஏறி
மீண்டும் இறைவனிடம் சொன்னேன்..
"படைத்தவனே.. நான் உன் படைப்பு..
களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்..
நான் உனக்கே உரிமையானவன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
ஆயிரம் சிறகுகள் போல்
கடந்து மறைந்தார்..

இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும்
புனித மலையில் ஏறி
நான் மீண்டும்
இறைவனிடம் சொன்னேன்..
"தந்தையே.. நான் உங்கள் மகன்..
கருணையினாலும் அன்பினாலும்
நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்..
பக்தியினாலும் வழிபாட்டினாலும்
நான் உங்களை அடைவேன்..!!"
இறைவன் மறுமொழி கூறாமல்
மலைச்சாரல் பனிமூட்டம் போல்
விலகி மறைந்தார்..

மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும்
மீண்டும் புனித மலையில் ஏறி
நான் இறைவனிடம் சொன்னேன்..
"இறைவா..
நீயே என் நோக்கம்..
நீயே என் நிறைவு..
நான் உன்னுடைய நேற்று..
நீ என்னுடைய நாளை..
நான் பூவுலகில் உன்னுடைய வேர்..
நீ வானுலகில் என்னுடைய மலர்..
சூரியனின் முகத்தின் முன்னால்
நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!"

இறைவன் என்னை நோக்கிக் குனிந்து
என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி
தன்னை நோக்கி வரும் நதியை
கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல்
என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்..

மலையிலிருந்து
நான் கீழே இறங்கி வந்த போது
இறைவன் எங்கும் நீக்கமற
நிறைந்திருந்தார்..!!

கலீல் கிப்ரான்


கலீல் கிப்ரான் புகழ்பெற்ற ஆசியக் கவிஞர்.. உருது மொழியிலும், ஆங்கிலத்திலும் அவர் இயற்றிய கவிதைகள் பலவும் மனம் கவரும் வகையிலே தத்துவக் கருத்துக்களைக் கூறிச் செல்பவை.. குறிப்பாக ஆங்கிலத்தில் அவர் இயற்றிய "The Prophet" மிகச் சிறந்த ஒரு படைப்பு. அவரது கவிதைகளில் சிலவற்றை இங்கு தமிழாக்கம் செய்து ஒவ்வொன்றாய் இடுகிறேன்..